FLASH NEWS : coming soon ......... -

பிறந்த தினத்தை எதிர்த்த நபி(ஸல்) க்கே பிறந்த தினக் கொண்டாட்டமா?

உலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான்.


நபியவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, நம்மை எப்படி வாழும் படி சொன்னார்களோ அந்த அடிப்படையில் தான் நாம் வாழ வேண்டும். நபியவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக நாம் வாழ்ந்தால் நாளை மறுமையில் தோழ்விதான் மிஞ்சும் என்று இறைவன் தனது அருள் மறையில் குறிப்பிடுகிறான்.

இந்தத் தூதர் எதனை (மார்க்கமாக) தந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.(59:7)

நபியவர்கள் இஸ்லாம் என்ற எதனை நமக்குக் காட்டித் தந்தார்களோ அதனைத் தான் நாமும் மார்க்கம் என்று பின்பற்ற வேண்டுமோ தவிர நாமாக மார்க்கத்தை உருவாக்கக் கூடாது.

செய்திகளில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் மிகவும் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் கெட்டதாகும்.ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ். நூல் : முஸ்லிம் 1435

மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை யாராவது மார்க்கம் என்று எடுத்து நடந்தால் அது நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மிகவும் தெளிவாக உணர்த்துவதுடன்,அப்படி மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நடை முறைப் படுத்துவது மறுமையில் நரகத்தில் சேர்க்கும் என்பதையும் மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகுமானதா?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலேயே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள். புகாரி (3456)

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் காட்டப்படாத வழிமுறையாகும்.

யூதர்களும், கிருத்தவர்ளுகம் தான் பிறந்த தின கொண்டாட்டங்களை நடத்துவார்கள் நாமும் அதனை நடைமுறைப்படுத்தி னால் நாமும் அவர்களைச் சார்ந்தவர்களாக மாறிவிடுவோம்.

நபியைப் புகழுதல் என்ற பெயரில் தான் இந்தனை அனாச்சாரமும் அரங்கேற்றப்படுகிறது. நுபியைப் புகழுதல் என்றால் நபி காட்டித் தராத வழிமுறையில் அவர்களைப் புகழுதல் புகழ்ச்சி அல்ல இறைவனும் அவனுடைய தூதரும் நபியவர்களை புகழ்வதற்கு அழகிய வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள். அந்த எதிலும் நபியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாளாக மாற்றி அந்நாளில் மவ்லிது ஓதுவதற்கு திருமறைக் குர்ஆனிலோ, நபி மொழிகளிலோ எந்த வழிகாட்டுதலும் இல்லை.

கிருத்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீரிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்” என்பது நபி மொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3445,6830

கிருத்தவர்களும், யூதர்களும் ஈஸா நபியை புகழ்ந்ததின் உச்சகட்டம் அவரை கடவுலின் மகனாக சித்தரிக்க முனைந்து விட்டார்கள் அதன் மூலம் அவர்கள் வழி கெட்டுப் போனதையும் திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலமாக நாம் தெளிவாக அறிகிறோம்.

இறுதியாக, நபியவர்கள் காட்டித் தராத காரியங்களை யார் மார்க்கம் என்று செய்தாலும் அது நரகத்திற்கு உரிய செயலாக மாறிவிடுகிறது. மார்க்கம் என்று எதையாவது நாம் செய்தால் அதனை அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ காட்டித் தந்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும் அல்லாஹ்வுன் அவனுடைய தூதரும் காட்டித் தராத எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாமாக மாற முடியாது.

நபியைக் கண்ணியப்படுத்துவதாக நினைத்துக் கொண்டுதான் பெரும்பாலானவர்கள் நபியவர்களுக்கு பிறந்த தினம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத மவ்லிதுகளை ஓதி வருகிறார்கள். இதற்கு அரசாங்க விடுமுறை வேறு.

பாடசாலைகள், பள்ளி வாயல்கள் தோறும் இந்த நிகழ்வு ஒரு விழாவாக மிகவும் விமர்சையாக கொண்டாடப் படுகிறது.

இதற்கான காரணம் நபியை கண்ணிப்படுத்துவதாம். நபியை கண்ணியப்படுத்துவதென்றால் நபியவர்கள் காட்டித் தந்த காரியங்களை செவ்வனே செய்வதுதான் நபியை கண்ணியப் படுத்தியதாக அமையுமே தவிர மார்க்கம் அங்கீகரிக்காக மார்க்கத்தில் இல்லாத காரியங்கள் மூலமாக நபியை கண்ணியப் படுத்துவதாக நாம் எண்ணினால் அது மிகவும் பாரதூரமான செயலாக மார்க்கத்தில் கருதப்பட்டு மறுமையில் நம்மை நரகத்தில் சேர்த்துவிடும்.

அன்பின் சகோதரர்களே! ஊர் பிரமுகர்களே! கல்வியாளர்களே! கண்ணியமிக்கவர்களே! பிறந்த நாள் என்ற மார்க்கத்திற்கு விரோதமான இந்த காரியத்தை விட்டும் தவிர்ந்து நாளை மறுமையில் வெற்றி பெருவோமாக
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved