முறையான திட்டமிடல் மற்றும் ஆர்வத்துடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வுக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதையும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் எளியமுறையில் விளக்குகிறார் கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், ஆர்.எம்.கே., குழும பள்ளிகளின் சீனியர் முதல்வருமான டாக்டர் சி.சதீஷ்.
* முதலில் தங்களால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்று நம்புங்கள். தற்போது பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருப்பதால் புதியதாக ஒரு பாடப் பகுதியை படிப்பதை தவிர்ப்பது நல்லது.
*இது வரை படித்த பாடங்களை "ரிவ்யூ ' செய்ய வேண்டும். ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் உட்பட அனைத்து விதமான கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்க இம்முறை உதவும்.
* அனைத்து பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள் தெரிகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர்கள் அறிவுறுத்திய முக்கியமான கேள்விகளையும், கேள்விகள் வேறு எந்தவகையில் கேட்கப்பட சாத்தியம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வினா வங்கி புத்தகத்தையும் பயன்படுத்தலாம். மேலும் கடந்த ஐந்து அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் வைத்து, அவற்றிற்கான பதில்களை மனதிற்குள்ளேயே சொல்லிப்பார்க்க வேண்டும்.
* எந்த கேள்விகள் கடினமாக உணரப்படுகிறதோ, அதற்கான பதில்களை கண்டிப்பாக எழுதிப்பார்க்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்கே ஒரு சுயதேர்வு (டெஸ்ட்) வைத்து எழுதிப் பார்க்க வேண்டும். இதன்மூலம் மனதில் அந்த பதில்கள் நன்கு பதியும்.
* தேர்வு காலங்களில் படிப்புடன், உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் அனைத்திற்குமே அடிப்படை ஆரோக்கியம் தான். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பசியுடன் படிக்க வேண்டாம். அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். முக்கியமாக எண்ணெய் பொருட்கள், "ஜங்க்' உணவுகளை தவிர்க்கவும். தூக்கம் குறைந்தாலும் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, குறைந்தது 6.30 மணிநேரம் உறங்க வேண்டும். தேர்வு நடைபெறும் காலங்களில் 7 மணிநேரம் உறங்குவது அவசியம்.
* படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியம். வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள ஒரு தனி அறையில் படிப்பது நல்லது. இல்லாவிட்டாலும், தொந்தரவு இல்லாத இடமாக இல்லாமல் இருந்தால் கூட போதுமானது.
* "டிவி' பார்த்துக்கொண்டே படிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தேர்வு நாட்களில் செல்போனை "சுவிட்ச் ஆப்' செய்து வைப்பதும், நண்பர்களுடன் தேவையில்லாதவற்றை பற்றி பேசுவதையும் தவர்க்கவேண்டும்.
* பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு 1.30 மணிநேரத்திற்கு ஒருமுறை 30 நிமிடம் இடைவெளி விட்டு படிக்கலாம்.
* தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், அமைதியாகவும், பதட்டமின்றியும் இருக்க வேண்டும். தங்களுக்கான இடத்தில் அமர்ந்த பிறகு, ஐந்து நிமிடம் பிராணயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யவேண்டும். இது தேர்வு பயத்தையும், பதட்டத்தையும் குறைக்கும்.
* கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை ஒருமுறை கவனமாக படித்துப்பார்க்க வேண்டும். விடைத்தாளை வாங்கியதும் அதில் நிரப்ப வேண்டிய கட்டங்களை கவனமாக நிரப்ப வேண்டும். தேர்வு எழுதும் போது முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதிலெழுதி, பின்னர் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அதில் தவறேதும் இல்லை. இதனால் மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது. கையெழுத்தை முடிந்தளவு தெளிவாக புரியும்படி எழுத வேண்டும். அதற்காக கையெழுத்தை சீர்செய்வதில் நேரத்தை செலவிட வேண்டாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கும்படி திட்டமிட்டு எழுத வேண்டும். ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
* தேர்வு நேரத்திற்கு முன்பே எழுதி முடித்தால், எழுதியவற்றை சரிபார்க்கவும். அதில் தவறுகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அந்த இடத்தை அடித்துவிட்டு சரியான பதிலை தெளிவாக எழுதவும். தேர்வு நேரம் முடிவடையும் முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியேற வேண்டாம். விடைத்தாளை இறுதியாக கொடுப்பதற்கு முன்பாக, உங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக விடைத்தாளில் எழுதியுள்ளீர்களா? என்பதை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.