FLASH NEWS : coming soon ......... -

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும், முஸ்லீம்களின் நிலையும்.

வேதமுடையோரே! ஊங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே! ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. ஆல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
(அல்குர்ஆன் 4:171)

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வணங்கி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை ஈஸா (அலை) பிறந்த தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கூட தெரியாது இருக்கிறார்கள்.

கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறு

முதலில் கிறிஸ்மஸ் பண்டிகை எவ்வாறு கிறிஸ்தவர்களின் புனித நாளாகக் கருதப்பட்டு வந்தது என்ற வரலாற்றை நோக்குவோம். கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப் பிரகாரம் இயேசு பிறப்பதற்கு முன்னரே அன்றைய மக்கள் மத்தியில் டிசெம்பர் மாதத்தில் பரிசில்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளல் மர அலங்காரம் செய்தல், பட்டாசுக்களைக் கொளுத்துதல் ஆகியன குளிர் கால காலாச்சாரமாக நிலவி வந்தன.

அத்துடன் 4000 வருடங்களிற்கு முன்னர் ‘மெசோபொடமியன்ஸ்’ எனும் பல கடவுள் கொள்கையிலுள்ளோர் ஒவ்வொரு குளிர் காலத்திலும் புது வருட பண்டிகையைத் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் கொண்டாடுவர். இந்தப் பண்டிகையை அவர்கள் தேர்வு செய்யக் காரணம் அவர்கள் நம்பிக்கைப் பிரகாரம் அவர்களின் கடவுள்களில் பிரதானமான கடவுள் இராட்சதனோடு சண்டையிட்டு வென்ற நாள் என்பதே.

பண்டைய ரோமானியர்கள் அவர்களின் கடவுளை கண்ணியப்படுத்தும் விதமாக டிசெம்பர் மாத அரைப் பகுதியிலிருந்து ஜனவரி முதலாம் திகதி வரை ஒரு பண்டிகையை கொண்டாடி வந்தனர். ரோமானியர்கள் இதற்காக அவர்களின் வீடுகளையும், மரங்களையும் அலங்கரித்து மெழுகுவர்த்திகளையும் தொங்க விடுவார்கள்.; இந்த பண்டிகையின்போது உறவினர்களினது வீடுகளுக்கு சமூகமளித்து பரிசில்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சில ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தின்போது சில குறிப்பிட்ட நாட்களிற்கு சூரியன் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். இதனால் இவர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி நெருப்புக் கிடங்கை பற்ற வைத்து மரங்களில் அலங்காரங்கள் செய்து பாடல்களை பாடியவர்கள் டிசெம்பர் 22க்கு அருகிலுள்ள காலப்பகுதியை தேர்வு செய்து பண்டிகையாக கொண்டாடினர்.

இயேசு பிறந்த பின் இந்த பண்டிகை எல்லாவற்றுடனும் சேர்த்து டிசெம்பர் மாதத்தில் இயேசு பிறந்த தினத்தையும் ஒரே பண்டிகையாக அதாவது டிசெம்பர் 25வது தினத்தில் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் உண்மையில் இயேசு பிறந்தது டிசெம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பைபிளின் கருத்துப்படி இயேசு கிருத்து ஒரு கோடை காலத்தில் தான் பிறந்திருக்க முடியுமே தவிர கண்டிப்பாக டிசம்பர் இருபத்தி ஐந்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

பார்க்க www.historyofchristmas.net

மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நிலை?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மாற்று) சமுகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மை சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் இப்னு உமர் (ரழி)
நூல் அபூதாவூத் (3512)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

"உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ் வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடிய வர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலலித் தார்கள் (புஹாரி 3456)


எந்த ஒரு முஸ்லிம் மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்று சில முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் அயலவர்களினதோ அல்லது நண்பர்களினதோ கிறிஸ்மஸ் வைபவங்களில் கலந்து கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து வாழ்த்துக் கூறக்கூடியவர்களாகவும் அவர்கள் கொண்டாட்டத்திற்காக செய்யும் அத்தனை நடவடிக்கைகளிலும் பங்கு பற்றக்கூடியவர்களாகவும் உள்ளனர். அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடியவர்களாக இருந்து கொண்டு ஈஸா (அலை) அவர்களை கடவுளாகக் கருதி கொண்டாடப்படும் பண்டிகையில் கலந்து அந்த நடவடிக்கைகளுக்கு தாமும் தம் ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அதாவது அந்நிய மத சகோதரர்களை, நண்பர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய நாம் அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஒப்பாக நடந்து நமது இஸ்லாமிய கொள்கையை விட்டுக் கொடுக்கக்கூடியவர்களாக மாறுவது மிகவும் வேதனைக்குரியதாகும். மேலும், இப் பண்டிகையின்போது தயாரிக்கப்படும் ‘கிறிஸ்மஸ் கேக்குகளில் மது வகைகள் கலக்கப்படுகின்றன. இதை அறிந்து கொண்டே நம் முஸ்லிம் சகோதரர்கள் அவற்றை உண்ணக்கூடியவர்களாக உள்ளனர்.

நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே, இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறு பவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை(பேரீச்ச மரக் கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, "(மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது'' என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், "வெளியே சென்று இதை ஊற்றிவிடு'' என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், "மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)'' என்று கேட்டார்கள். அப்போது தான், "இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை'' (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது
(புஹாரி 2464)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 5575)

மேலும், கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சியை விரும்பி சாப்பிடக்கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் நமது வீட்டுக்கு உணவு ஏதேனும் அனுப்பினால் அவ்வுணவில் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஹராமானவை இல்லாதிருந்தால் தாராளமாக சாப்பிடலாம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:115)

மேலதிக விபரங்களுக்கு இங்கு க்லிக் செய்யவும்.

ஆகவே, மாற்று மத சகோதரர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் கையால் தடுக்கட்டும் அதற்கு சக்தி இல்லாதவர் வாயால் தடுக்கட்டும் அதற்கும் சக்தி இல்லாதவர் மனதினால் வெறுத்து ஒதுங்கட்டும் இது தான் ஈமானில் மிக பலவீனமாக நிலையாகும் (முஸ்லிம் 70)

எனவே, மாற்று மத கலாச்சாரங்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த அழகிய வழியில் வாழ்ந்து ஈருலகிலும் நற்பேறுகளைப் பெற்று சுவர்க்கத்துக்குரியவர்களாக மாற அல்லாஹ் அருள் புரிவானாக!

நன்றி : rasimn misc


Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved