அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
இறைவனின் மாபெரும் கிருபை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.
இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.
பொதுக்குழுவும் அவசர செயற்குழுவும்:
மற்ற தேர்தல்களைப் போல அல்லாமல் இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான அவசரமான தேர்தலாக மாறிப் போனது. இந்த அவசரத்தில் எப்படியாவது துண்டு போட்டு 3 சீட்டு பிடித்து விட வேண்டும் என்ற ரீதியில் இதே சிந்தனையாக, அந்த அமைப்பு சார்ந்த எந்த மக்களின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மற்ற அமைப்பினர்கள் தூது விட்டுக் காத்திருக்க, இந்த அவசரத்திலும் அசராமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவைக் கூட்டி மக்கள் முடிவைக் கேட்டது.
அதாவது ஆளும் திமுக இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறா விட்டால் அதிமுக அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். திமுக இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுகவை ஆதரிப்பது என்ற செயல் திட்டத்தோடு சேலம் பொதுக்குழு நிறைவுபெற்றது.
ஆனால் ஆளும் திமுகவினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அதிமுகவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை திநகரில் அவசர செயற்குழு கூட்டப்பட்டது. செயற்குழு அறிவித்த அந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது.
அதாவது கட்டாயமாக தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்ற நிலையில் இருந்தது அதிமுக தலைமை. ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அதிமுக இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.
அதிமுகவினர் ஏற்படுத்திய நம்பிக்கை:
செயற்குழு முடிந்தும் கூட திமுகவினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள் அதிமுகவினர். தேர்தல் அறிக்கை பற்றி அவர்களிடத்திலே தொடர்ந்து கேட்கப்பட்டது. அதெல்லாம் கவலையே படாதீர்கள். உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது.
அதிமுகவின் துரோகமும் சமுதாயக்காவலர்களின் மௌனமும்:
இந்த நிலையில் திருச்சியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக தலைவர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் அதில் இஸ்லாம் அல்லது முஸ்லீம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லாலது கண்டு கொதிப்படைந்தது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை. சாதரண துரோகத்தைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இது பச்சை நம்பிக்கை துரோகம் என்ற ரீதியில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி இதை மக்கள் மன்றத்தில் வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் அதிமுகவை ஆதரித்தவர்களும், அவர்களிடத்திலே சீட்டு வாங்கியவர்களும் இதைப் பற்றி ஏதாவது பேசினால் நமக்கு கிடைத்த சீட்டு பறிபோய் விடும் என்ற நிலையில் வாய்மூடி மௌனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், பார்த்தீர்களா! ஜெயலலிதா திருச்சி கூட்டத்திலே இடஒதுக்கீடு குறித்து சொல்லிவிட்டார் என்ற ரீதியில் முழக்கமிடவும் துவங்கிவிட்டார்கள்.
தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்த செய்தி இல்லையென்றதும் பதறியடித்து கூட்டணியை விட்டே வெளியே வந்திருக்க வேண்டாமா? அல்லது இடஒதுக்கீடு குறித்த உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டாமா? எங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கிடைத்தால் போதும் நாங்கள் வெற்றிபெற்றால் போதும் என போகிற போக்கில் காற்றுவாக்கில் சொல்கிற கோரிக்கைகளுக்கு கொடிபிடித்து அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் செயல் வெறுப்பைத் தான் ஏற்படுத்துகிறது
மீண்டும் கூடிய அவசர பொதுக்குழு:
இந்த விசயத்தில் திருப்தியடையாத தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக அவசர பொதுக்குழுவைக் கூட்டியது. செய்யவே மாட்டேன் என சொல்பவனும், வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் திமுகவினரின் இன்றைய நிலையும், அதிமுகவினர் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைப்பது என முடிவுசெய்யப்பட்டு இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து அதை இருமடங்காக்கி வழங்குவேன் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இடஒதுக்கீட்டு விசயத்தை மட்டும் தூக்கி தூர எறிந்தார்.
அதைப் பற்றி பேசுவதற்கோ கேட்பதற்கோ அம்மாவின் நவீன அடிமைகள் தயங்கும் போது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பணிய மாட்டோம், தேர்தல் நட்பு தேர்தல் முடியும் வரை மட்டும் தான். அடுத்த நாள் அவர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையாக களமிறங்குவோம், நமக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, நம் ஆதரவு தான் அவர்களுக்குத் தேவை என்ற ரீதியில் இன்று வரை இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரு கட்சியினர் செய்த துரோகங்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தது.
வாக்கெடுப்பும் மக்களின் தீர்ப்பும்:
இந்த இடத்தில் சமுதாயத்திற்கு அதிமுக செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன.
1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி ய்யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்
2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் திமிகவுக்கு ஆதரவு அளிப்பது
என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.
மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல.
ஆக சமுதாயத்தைக் காட்டி ஒன்று, இரண்டு, மூன்று அதுவும் இல்லைன்னாலும் பரவாயில்லை கிடைத்ததை வாங்கிக்கொண்டு கிடையாய்க் கிடக்கிறோம், நீங்கள் தான் சமுதாய காவலர், நாங்கள் காலங்காலமாக நீங்கள் சமுதாயத்திற்கு என்ன துரோகம் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம், எங்களுக்கு 3 தாருங்கள் நாங்கள் 300க்கு உழைப்போம் என அவர்களுக்கு கொடி தூக்குவதும், இவர்களை ஆதரிக்கும் போது அவர்களைத் திட்டுவதும், அவர்கள் பக்கம் ஓடிவிட்டால் இவர்களைத் திட்டுவதும் என மோடிமஸ்தான் வேலைகளைச் செய்து எப்படியாவது தங்களை சமுதாய காவலர்களாக காட்டிக்கொள்ள துடிக்கும் சமுதாய துரோகிகளுக்கு மத்தியில் மக்கள் முடிவே அமைப்பின் முடிவு என்ற நிலையை மட்டும் கையாளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து விளங்குகின்றது. எல்லா புகழும் இறைவனுக்கே!
source: www.tntj.net